நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், தேசிய தேர்வு முகமை மற்றும் சிபிசிஐடி போலீசுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வியை எழுப்பியது.
2019 நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 27 ஆவது குற்றவாளி தருண் மோகன் தன்னை விடுவிக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது எத்தனை பேரை கைது செய்திருக்கிறீர்கள் என நீதிபதி புகழேந்தி கேட்க, கைரேகை பதிவு, தேர்வு மையம், தொலைபேசி எண்கள் எல்லாம் கடந்த 22 ஆம் தேதிதான் வழங்கப்பட்டது, தேசிய தேர்வு முகமை இன்னும் விண்ணப்பங்களை வழங்கவில்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இடைத்தரகரை நெருங்கிவிட்டதாகவும், விண்ணப்பங்கள் கிடைத்தால் உறுதி செய்துவிடலாம், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது அனைத்து விபரங்களையும் வழங்கினால்தானே முழுமையாக விசாரிக்க இயலும் என தேசிய தேர்வு முகமை தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை... இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என குறிப்பிட்டார். இறுதியாக விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்று சிபிசிஐடியை எச்சரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்