2 லட்ச பேருக்கு காய்ச்சல்...வெளியான அதிர்ச்சி தகவல்
கேரளாவில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் பருவமழை காரணமாக காய்ச்சல், தொற்றுநோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் எலிக்காயச்சலால் 253 பேரும், டெங்கு காய்ச்சலால் ஆயிரத்து 912 பேரும், மஞ்சள் காமாலையால் 500 பேரும், எச்.1 என்.1 தொற்றால் 275 பேரும் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.மேலும், எலி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மஞ்சள் காமாலைக்கு 5 பேரும், எச்.1 என்.1 தொற்றுக்கு 3 பேரும் இறந்துள்ளனர். நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 127 பேரும், நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 914 பேரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 186 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர். மழை தீவிரமடையும்போது நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.