கேரள அரசின் மனுவை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் கடன் வாங்கும் வரம்பை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக, மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது. ஏப்ரல் ஒன்றாம் தேதி கூறிய தீர்ப்பில், கூடுதல் கடன் பெறும் மாநிலத்துக்கு கடன் வழங்கும் வரம்பை மத்திய அரசு குறைக்க முடியும் என உச்சநீதிமன்றம் இடைக்காலமாக தெரிவித்தது. கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் கேரளத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முறையிட்டார். முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.