பிளவுபட்ட JK; ரிசல்ட்டுக்கு முன்பே 5 MLA - ஆனாலும் மண்ணை கவ்விய பாஜக... பிஜேபிக்கு காஷ்மீரின் பதில்

Update: 2024-10-09 09:23 GMT

காஷ்மீரில் அரியணைக்கு ஆசைப்பட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும் வேளையில், மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளை இந்த தொகுப்பில் காணலாம்......

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, யூனியன் பிரதேசமாக்கப்பட்டு 2022-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தொகுதி மறு சீரமைப்பில் இந்துக்கள் அதிகம் வாழும் ஜம்முவில் 6 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

2019 வரையில் மாநிலத்தில் ஜம்முவில் 37 சட்டப்பேரவை தொகுதிகளும், காஷ்மீரில் 46 சட்டப்பேரவை தொகுதிகளும் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு ஜம்முவில் 6 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு அங்கு 43 தொகுதிகள் உள்ளன. அதுவே காஷ்மீரில் ஒரு தொகுதி மட்டுமே அதிகரிக்கப்பட்டு 47 தொகுதிகளாக்கப்பட்டது.

7 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகளாகவும், 9 தொகுதிகள் பழங்குடியினர் தொகுதிகளாகவும் இறுதி செய்யப்பட்டது. இதில் 3 பழங்குடியினர் தொகுதி காஷ்மீர் பிராந்தியத்திற்குள் வந்தது.

ஜம்மு காஷ்மீரில் பழங்குடியினருக்கு சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இவ்வாண்டு தொடக்கத்தில் பஹாரி, பதரி இனமக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதுபோக 5 மாநிலத்தில் புதுச்சேரியில் எப்படி துணைநிலை ஆளுநர் 3 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்யலாமோ அதுபோல காஷ்மீரிலும் 5 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்ய சட்டம் திருத்தப்பட்டது.

ஜம்முவில் தொகுதிகள் அதிகரிப்பு, காஷ்மீரில் பழங்குடியினர் தொகுதி உருவாக்கம், 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் இதெல்லாம்... மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக போடும் மறைமுக கணக்கு என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதாவது இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட ஜம்மு பிராந்தியத்திலும், பழங்குடியினர் தொகுதியிலும் பாஜக வென்றால் அக்கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க வழிவகுக்கும் என்ற பேச்சும் நிலவியது.

காஷ்மீரில் யார் ஆட்சியமைப்பார் என்பதை ஜம்மு தீர்மானிக்கும் என அமித்ஷா பிரசாரத்தில் முழங்கினார்.

தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என கருத்துக்கணிப்புகள் வெளியான போது, சுயேட்சைகள் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனவும், நியமன எம்.எல்.ஏ.க்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் எனவும் பேசப்பட்டது.

ஆனால் அரியானாவில் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் பாஜகவுக்கு, ஜம்மு காஷ்மீரில் மக்கள் தீர்ப்பு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என தீவிரமாக பிரசாரம் செய்த பாஜகவால் அரியணையை பிடிக்க முடியவில்லை.

ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் 29 இடங்களில் பாஜக வெற்றியை வசமாக்கியது. இருப்பினும் பாஜக கணிசமான தனது கட்சி கணக்கை அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. ஆம், கடந்த தேர்தலில் 25 இடங்களில் வென்று 2 ஆம் இடம்பிடித்த பாஜக இம்முறை 29 இடங்களை வென்று 2 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்