ஆந்திர சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு வாசகம் அடங்கிய பதாகைகளுடன் உள்ளே செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆந்திராவில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்புத் துண்டு அணிந்தபடி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தனர்.
மேலும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகளை வைத்திருந்தனர்.
சட்டமன்ற நுழைவாயிலில், பணியில் இருந்த போலீசார், பதாகைகளுடன் உள்ளே செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் அதிகாரி மதுசூதன் ராவ், எம்.எல்.ஏ.க்கள் கையில் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களை பறித்து கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, நீங்கள் அணியும் தொப்பியில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சிங்கம் சின்னத்திற்கு அர்த்தம் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது அல்ல...பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவே அந்த சின்னம் என்று சட்டமன்ற வாயிலில் வகுப்பு எடுப்பதுபோல் அறிவுரை கூறினார்.