இந்தியா மற்றும் இலங்கை இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா சேவையை மேம்படுத்த, நாகையில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்பந்தமானது. இதைத் தொடர்ந்து, செரியாபாணி கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கடந்த 10-ஆம் தேதி போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில நடைமுறை சிக்கல்களால், போக்குவரத்து சேவை தள்ளிப்போனது. இந்நிலையில், அனைத்து பணிகளும் நிறைவுபெற்றதால் இன்று காலை சுமார் 8 மணியளவில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கவுள்ளது. இதனை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவு குறித்து உரையாற்றுகிறார்.