3வது முறையாக மீண்டும் பாஜகவின் கைக்கு வருமா? பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்

Update: 2024-10-05 06:09 GMT

ஹரியானா முதல்வரும், லட்வா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான நயாப் சிங் சைனி, அம்பாலாவில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானா மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஹரியானா மக்களின் மனநிலை தெளிவாக இருப்பதாகவும், வரும் 8ம் தேதி அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்றும் நயாப் சிங் சைனி குறிப்பிட்டார். தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னதாக, அம்பாலாவில் உள்ள குருத்வாராவில் முதல்வர் நயாப் சிங் சைனி வழிபட்டார்.

மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், கர்னல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. 50 தொகுதிகளுக்கும் அதிகமாக கைப்பற்றி, 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஜஜ்ஜாரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், தான் முதன்முறையாக வாக்களித்ததாகவும் மனு பாக்கர் தெரிவித்தார்.

இதேபோல், மத்திய அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார், குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், பஞ்ச்குலா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தர்மோகன், கைத்தல் தொகுதி வேட்பாளர் ஆதித்ய சுர்ஜேவாலா ஆகியோரும், தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

ஜுலானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், சார்கி தாத்ரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஹரியானாவில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா இது என்று தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்குமுன் பூபிந்தர் ஹுடா ஆட்சியில் விளையாட்டுத்துறை மிகச்சிறப்பாக இருந்ததாகவும் வினேஷ் போகத் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்