வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய முதன்மை பொறுப்பு என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை தேசிய அடையாளமாக நியமித்து தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே 3 ஆண்டு காலத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய சச்சின், உலகிலேயே சராசரி இளம் வயது கொண்டோர் உள்ள நாடாக இந்தியா விளங்குவதாகவும், வாக்களிப்பதில் உலகிலேயே மிகவும் பொறுப்பான நாடாக இந்தியா திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.