டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்குச் சென்றிருந்தார். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு கெஜ்ரிவால் பேட்டி அளித்தபோது, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து எடுத்த முடிவுதான் என்று கூறினார். கூட்டணி தொடர்பாக தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்றும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். டெல்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி இல்லாவிட்டால், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும் என்றும் அவர் கூறினார்.