பிரதமருக்கு டப் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்-'அவர் பாணியிலேயே அவருக்கு போட்ட ஸ்கெட்ச்?'

Update: 2023-09-01 01:00 GMT

இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாக கூறி பாட்காஸ்ட் ஆடியோ சீரிஸ் வெளியிடப்போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உங்களில் ஒருவன் பதில்கள் என மக்களின் கேள்விகளுக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து வந்தார்.இந்நிலையில் தான் பாட்காஸ்ட் பக்கம் அவர் கவனம் திரும்பியுள்ளது. ஆனால் இது பிரதமர் மோடி வானொலியில் மக்களுடன் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி போலவே உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2014ம் ஆண்டு முதல் தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சி அந்தந்த மக்களுக்கு ஏற்ப பல்வேறு மொழிகளில் தற்போது வரை..வெற்றிகரமாக ஒலிபரப்பாகிறது என்றே சொல்லலாம். மக்களுடன் நாட்டின் பிரதமர் இணைய முயற்சிக்கும் இந்த முயற்சியை பல உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள உள்ளூர் சிக்கலை எடுத்துரைத்துஅதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது வரை பல கோணங்களில் பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார்.இதனால் மக்களுக்கும் பிரதமருக்கும் இடையே ஆரோக்கியமான உறவு ஏற்ப்பட்டது என்றே அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

100 தொகுப்புகளை தாண்டியுள்ள மனதின் குரல் நிகழ்ச்சி இன்றளவும் தேசிய அளவில் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சி யாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இதன் சாயலிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாட்காஸ்ட் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உங்களில் ஒருவன் பதில்களை தொடர்ந்து புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த ஆடியோ சீரிஸ் மக்களுடனான உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இது மனதின் குரல் நிகழ்ச்சியின் காப்பி என சிலர் தெரிவிக்க...அதனை முற்றிலும் மறுக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். மக்களுடன் இணையக்கூடிய இத்திட்டத்திற்கு விதை விதைத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என்றும் தெரிவிக்கின்றனர்.1968ம் ஆண்டு முதல் உடன்பிறப்பு கடிதம் மூலம் தொண்டர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார் கருணாநிதி. இதன் தொடர்ச்சி தான் உங்களில் ஒருவன் பதில்கள் என்றும்..இதன் மறு உருவம் தான் தற்போது வெளிவரவுள்ள ஆடியோ சீரிஸ் எனவும் கூறுகின்றனர் திமுக ஆதரவாளர்கள். இதனால் இது பிரதமரின் சாயலாக இல்லாமல்...மக்களுடன் நேரடியாக தொடர்புப்படுத்தி கொள்வதற்கான முயற்சி என்றும் சொல்லப்படுகிறது. எதுவாக இருப்பினும்...பிரதமர் பாணியிலேயே பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்கெட்ச் போட தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்