கோவாக்சின் சர்ச்சையும், பயோடெக் நிறுவனம் விளக்கமும்...

இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரமாக பதிவாகி வரும் நிலையில், தடுப்பூசியின் தேவை குறைந்துவிட்டதால்

Update: 2022-04-03 12:07 GMT
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி சப்ளையை நிறுத்தியதோடு, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோவாக்சின் பயன்படுத்தும் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரமாக பதிவாகி வரும் நிலையில், தடுப்பூசியின் தேவை குறைந்துவிட்டதால் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பை குறைப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அறிவித்திருந்தது. முன்னதாக கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்கு பிறகு தனது உற்பத்தியை குறைக்க இருப்பதாகவும், பராமரிப்பு, நவீன வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுள் கவனம் செலுத்த இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நல்ல தயாரிப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஐக்கிய நாடுகள் ஏஜென்சி மூலம் விநியோகிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதே வேளையில், தரவுகளின் அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி பயனுள்ளது என்றும் பாதுகாப்பு அளிக்க கூடியது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கான கோவாக்சின் உற்பத்தியை நிறுத்துவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏற்றுமதிக்கான உற்பத்தி நிறுத்தப்பட்டதால், கோவாக்சின் சப்ளையில் தடை ஏற்படும் என்பதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோவாக்சின் பயன்படுத்தும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அதன் செயல்திறன் மீது எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்