தீவிரமடையும் ஹிஜாப் விவகாரம் - என்ன சொல்ல போகிறது உயர்நீதிமன்றம்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது குறித்து காணலாம்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. வகுப்பறைக்கு சீருடையில்தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தாங்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே பள்ளியில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வர தொடங்கியதுடன், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை கழற்றினால் மட்டுமே, தாங்கள் காவி துண்டை கழற்றுவோம் எனவும் தெரிவித்தனர்.
இந்த சூழல் பிற பள்ளிகளிலும் எதிரொலிக்க, ஹிஜாப், காவி துண்டு இல்லாமல் வந்த மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் மாண்டியா, பாகல்கோட், உடுப்பி மாவட்டங்களில் இரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியும் அரங்கேறியது.
இதற்கிடையே ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி மாணவிகள் தொடர்ந்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எல்.தீட்சித், மாணவர்களும் பொதுமக்களும் அமைதிகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நீதிபதி தீட்சித், சில விஷமிகள் மட்டுமே இந்த பிரச்சினையை வளர்க்கிறார்கள் என கடிந்துகொண்டார்.
வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, மாநிலத்தில் 3 நாட்கள் மேல்நிலை பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூட மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும், 3 நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக பசவராஜ் பொம்மை கூறியிருக்கும் நிலையில், உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.