கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பல் - துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை பிடித்த போலீசார்
ஆந்திராவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உடலில் குண்டு பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரக்கு வேலி வனப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வேனை மறித்து சோதனை செய்ய முயன்றபோது வேனில் இருந்த எட்டு பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தற்காப்பு கருதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்தனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் சிந்தப்பள்ளி மண்டலம், அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த காமராஜ், ராம்பாபு ஆகிய இருவருக்கும் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.