விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி - டெல்லி நுழைவாயிலில் உச்சகட்ட பாதுகாப்பு
டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவுகிறது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையொட்டி, டெல்லி செல்லும் முக்கிய நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டன. போலீசார் தடுப்புகள் மற்றும் முள்வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், டெல்லி - பகதூர்கார் நெடுஞ்சாலையில் உள்ள டிக்ரி பகுதியில், பேரணியாக வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விவசாயிகளை களைக்க முயன்றனர். இருந்தும் விவசாயிகள், அதே இடத்தில் குழுமியபடி, முழக்கமிட்டு வருகின்றனர். இதில், கைதாகும் விவசாயிகளை அடைத்து வைக்க, 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக பயன்படுத்திக் கொள்ள, டெல்லி அரசுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.