கனமழைக்கு இதுவரை 148 பேர் உயிரிழப்பு : உத்தரப்பிரதேசத்தில் 111 பேர் - பீகாரில் 29 பேர் பலி
உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால், உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 111 பேரும், பீகாரில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் பாயும் பெரும்பாலான ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பலர் வீடுகளுக்கு உள்ளேயும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மழைக்கு உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 111 பேரும், பீகாரில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர். பாட்னாவில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக டெல்லியில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா தலைமையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.