கர்நாடக முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை : முதல்வர் குமாரசாமி உத்தரவால் சர்ச்சை
ஊராட்சி முன்னாள் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க வேண்டும் என, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மத்தூர் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்த பிரகாஷ், மர்ம நபர்களால் நேற்று வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஹூப்ளியில் இருந்த அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு விழாவில் பங்கேற்றிருந்த அவர், போலீஸ் அதிகாரியை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொலை செய்தவர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார்.
இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவர் பேசியது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர், அது தான் முதல்வராக கொடுத்த உத்தரவு கிடையாது என்றும், அந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட கோபத்தினால் பேசியது என்றும் கூறியுள்ளார்.