5 மாநில பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை காலை 8 தொடங்குகிறது.
5 மாநிலங்களில் மொத்தமுள்ள 679 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர எஞ்சிய 678 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் பா.ஜ.க. உயர்மட்ட குழுத் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜி, தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, சத்திஸ்கரில் நான்காவது முறையாக யாருடைய தயவும் இல்லாமல், தனி பெரும்பான்மை உடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்றும், தொங்கு சட்டமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் ரமன்சிங் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பா.ஜ.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அம்மாநில பா.ஜ.க. தலைவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க யாருக்கும் போதுமான இடம் கிடைக்காத நிலையில், மேலிட ஆலோசனைப்படி தங்கள் ஆதரவு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும்,அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்றும், போதுமான இடங்களில்
வென்று தனியாகவே ஆட்சி அமைப்போம் என்று, தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி செய்தித் தொடர்பாளர் பானு பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து,
மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில காங்கிரஸ் கட்சி, புகார் அளித்துள்ளது.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் குழப்பத்தில் இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ் பிரச்சினையை
கிளப்பலாம் என்பதால், மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள், பொறுப்பாளர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மிசோரமில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது பா.ஜ.க. கூட்டணி வசம் ஆட்சி மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.