ஜெய் பீம் படத்தின் கதைக்களம் - கிராமத்தில் நடந்தது என்ன...?
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படத்தின் கதைக்களமான கிராமத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
கடந்த 1996 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தை சேர்ந்த, இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராஜகண்ணு என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவலர்கள் சித்ரவதை செய்து கொன்றதை அடிப்படையாக கொண்டு ஜெய் பீம் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சாட்சியான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், ராஜகண்ணு தப்பிவிட்டதாக போலீசார் நாடகமாடினர் என்றார்.
இதேபோல அந்த கிராம மக்களும், ராஜகண்ணு குடும்பத்தார் நல்ல மனிதர்கள் என்றும் அவர்கள் போலீசாரால் என்ன கொடுமையெல்லாம் அனுபவிக்க முடியுமோ அதையெல்லாம் அனுபவித்தனர் என்றும் கூறினர்.
வழக்கறிஞர் சந்துருவை சந்தித்து பேசிய பின்னர், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறிய கோவிந்தன், ராஜகண்ணுவுடன் கைது செய்யப்பட்ட ஆட்சியம்மா தங்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை பதிவு செய்த போது நீதிபதியே தலை குனிந்தார் என அப்போதைய நினைவுகளை, தனது தழுதழுத்த குரலில் பகிர்ந்து கொண்டார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். வழக்கு குறித்து பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தோம், சாட்சியை விசாரித்ததும் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது என்றார்.
ஐஜி பெருமாள் சாமி விசாரணையில் உண்மை தெரியவந்தது என்றும் சந்துரு குறிப்பிட்டார்.
இதனையடுத்து காவல்துறையை சேர்ந்தவர்களை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு சிறை தண்டனையையும் விதித்தது என்கிறார் சந்துரு. ஜெய்பீம் படத்தில், வழக்கில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், 90 சதவீதம் உண்மை சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.