உயிர்காவு வாங்கும் சவக்குழியான பாலாறு-"போலீசிடம் சென்றதும் தலைகீழா நடக்குது" - கண்ணீர் விடும் மக்கள்
உயிர்காவு வாங்கும் சவக்குழியான பாலாறு... "போலீசிடம் சென்றதும் தலைகீழா நடக்குது" - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் மக்கள்
மணல் கொள்ளையர்களின் எல்லை மீறிய கைவரிசையால் ஒரு உயிரை பறிகொடுத்து கிராமமே வீதியில் இறங்கி போராடி வருகிறது. வேலூர் மாவட்டத்தை உலுக்கி இருக்கும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...
சட்டவிரோதமாக மணல் அள்ளியதால் ஆற்றுக்குள் ஏற்பட்ட பள்ளம், இளைஞர் ஒருவரின் உயிரை பறித்திருக்கிறது...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்ணாபுரம் பாலாற்றில் இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது...
முள்ளிப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து வழக்கம்போல் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், மணல் கொள்ளைக்காக ஆற்றுக்குள் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்...
இந்த உயிர் பலி சம்பவம் முதல் முறையல்ல எனவும், ஏற்கனவே மூவரின் உயிரை மணல் கொள்ளையர்களால் இந்த பாலாறு குடித்திருப்பதாகவும் சிறுவன் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
பாலாற்றை சுற்றியுள்ள பகுதிவாசிகள், இந்த மணல் கொள்ளை சம்பவத்தை ஏற்கனவே கண்டித்திருந்த நிலையில், தற்போது பறிபோயிருக்கும் ஒருவரின் உயிர் அவர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது...
தட்டிக்கேட்டால் பகுதியை விட்டு காலி செய்து விடுவார்களோ என அச்சத்தில் இருந்த மக்கள், மீண்டும் ஒருவரை பறிகொடுத்த வேதனை மணல் கொள்ளைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கிறது..
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இனிமேல் மணல் கொள்ளை நடக்காது என உறுதியளித்து அனுப்பி வைத்த நிலையில், மறுநாளே லாரி ஒன்று மீண்டும் மணல் எடுக்க ஆற்றுக்கு வந்தது மக்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இருக்கிறது..
உடனே, லாரியை மறித்து அப்பகுதி இளைஞர்கள் முதல் பெண்கள் வரை போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்...
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த விருதம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தனும், எஸ்.ஐ ஆதர்ஷூம், மணல் கொள்ளையர்களை தடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைந்து போகச் சொல்லி கண்மூடித்தனமாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
மணல் கொள்ளை, உயிர் பலி, மக்களின் போராட்டம், பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் என சினிமாவை மிஞ்சும் வகையில் வேலூரில் அரங்கேறி இருக்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மாவட்டத்தை உலுக்கி இருக்கிறது...