தமிழகத்தால் மறக்க முடியாத நாளான டிச.26.. மனித ரத்தம் புசித்த பேரலை - ``6 மணியானால் இன்றும் பதற்றம்’’

Update: 2024-12-26 06:26 GMT

சுனாமி ஏற்படுத்திவிட்டு சென்ற வடுக்கள் இன்னமும் நமது மனதில் வேதனையை ஏற்படுத்திக் கொண்டு தான், இருக்கின்றன. இந்த சூழலில், சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சுனாமி குடியிருப்புகள் தற்போது சிதிலமடைந்து போய், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடலூர் முதுநகரில் முட்புதர்கள் சூழ்ந்தும் அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், பயனற்ற சுனாமி குடியிருப்புகளாக காட்சியளிக்கின்றன. இதனை சீரமைத்து தங்களுக்கு உதவ வேண்டும் என 3 மீனவ கிராம மக்கள் காத்திருக்கின்றனர். கடல் சார்ந்த மாவட்டமான கடலூரில், கடற்கரை கிராமங்களும், மீன்பிடி தொழிலும் பிரதானமாக உள்ளன.

இந்த மாவட்டத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தில் கடற்கரை கிராமங்கள் கடலூர் முதல் சிதம்பரம் வரை சுனாமி எனும் அழிவின் பிடியில் சிக்கி பல மனித உயிர்களை, பலி கொடுத்த நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மூலம் பல்வேறு மீனவ கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் குடியிருப்புகள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த சூழலில்தான், கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதியில் இதன் வரிசையில் செல்லங்குப்பம் அருகே குட்டி ஆண்டவர் கோயில் பகுதியில் அரசு சார்பில் 538 சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு செல்லங்குப்பம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதி மீனவ கிராம மக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த குடியிருப்புகள் தனி வீடுகளாக அமைக்கப்பட்டு சுனாமி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்களுக்கு வழங்கிய நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் 100 வீடுகளுக்கு மட்டுமே அப்பொழுது வந்து மக்கள் குடியேறினர்.

பேரிடர் பாதிப்பில் சிக்கித் தவித்த மீனவ கிராம மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்த வசதியில் கிடைக்காததால் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிய நிலையில், இப்போது இங்குள்ளவை பாழடைந்த பேய் வீடுகளாகவே காட்சி அளிக்கின்றன.

குடி வந்தவர்களின் வீடுகளும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதால் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டனர்.

இது தொடர்பாக சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், சுனாமி நகர் பகுதி மீனவ கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்ற நிலையே தொடர்வதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயன் தரும் என தெரிவிக்கின்றனர்.

அதேபோல, சுனாமி குடியிருப்பை புனரமைத்து புது வீடுகளைக் கட்டி, அவற்றை தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 மீனவ கிராம மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பும் கூட..!

Tags:    

மேலும் செய்திகள்