இவர்கள் எல்லாம் இன்று நம் கூட இல்லையா? மறக்கவே முடியாத வலியை கொடுத்த 2024
2024ல் நம்மை விட்டு பிரிந்த பிரபலங்கள் யார்? ஒரு ரீவைண்ட் செய்கிறது இந்த தொகுப்பு..
ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி 25ம் தேதி இளையராஜாவின் மகள், பின்னணி பாடகி பவதாரணி புற்றுநோயால் உயிரிழந்த செய்தி திரையுலகை சோகத்திற்குள்ளாக்கியது... மகளின் மறைவில் இருந்து மீள முடியாமல் தவித்தார் இளையராஜா...
பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை உள்ளிட்ட படங்களி நடித்த டேனியல் பாலாஜி மார்ச் மாதம் தனது 48வது வயதில் காலமானார்.
எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் வயது மூப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.
இதே போல் தெகிடி பட நடிகர் பிரதீப், நகைச்சுவை நடிகர் சேஷு, பிஜிலி ரமேஷ், நடிகர் கோதண்டராமன் உள்ளிட்ட துணை நடிகர்களின் திடீர் மரணமும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
மேலும் 19 வயதேயான தங்கல் பட நடிகை சுஹானி Dermatomyositis பாதிப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 12ம் தேதி காலமானார்.
பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா தனது 84வது வயதில் செப்டம்பர் 17ம் தேதி காலமானார்.
இந்திய தொழில்துறையின் முகமாக விளங்கிய ரத்தன் டாடா, அக்டோபர் 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமான செய்தி நாட்டு மக்களை வேதனைக்குள்ளாக்கியது..
இந்நிலையில், கோலிவுட்டின் சிறந்த குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி காலமானார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா தனது 92வது வயதில் டிசம்பர் 10ம் தேதி காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் 14ம் தேதி தனது 75 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
உலக புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரான 73 வயதான ஜாகிர் உசைன், டிசம்பர் 16ம் தேதி இதயம் தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார்.
மரங்களின் பாதுகாவலரும், பத்மஸ்ரீ விருது விழாவில் வெறுங்காலுடன் வந்து கவனம் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா, தனது 86 வயதில் காலமானார்.
கார்த்தி நடித்த சகுனி படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார்.
ஹரியானா மாநிலத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா 89 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.