பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.!
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. இதில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதுடன், டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்காக கடந்த ஜுன் மாதம் 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்திற்குள் மீண்டும் கூட வேண்டும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்திற்குப்பின், 2024-2025ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர் மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை, துணை பட்ஜெட் மீது விவாதம் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபைக் கூட்டம் நிறைவடையும். அதன்பின் புத்தாண்டில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.