ஊருக்குள் இருந்தும் அனாதையான மூன்று குடும்பங்கள்! - ஒரு வார்த்தை பேசினாலும் ரூ. 5000 அபராதம்

Update: 2023-07-26 14:19 GMT

ஊருக்குள் இருந்தும் அனாதையான மூன்று குடும்பங்கள்! - ஒரு வார்த்தை பேசினாலும் ரூ. 5000 அபராதம்... யார் செய்த பாவம்.. நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராம மக்கள் 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பத்திகவுண்டனூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தையொட்டி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான 6 சென்ட் நிலமும், அவரது அண்ணன் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை சென்ட் நிலமும் உள்ளது.

இதில் நரேந்திரன் பெயரில் இருந்த இரண்டரை சென்ட் நிலத்தை கோவிலுக்கு வாங்க முடிவு செய்த கிராம மக்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசி, முன்பணமாக நரேந்திரனிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, பெட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பத்திகவுண்டனுார் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த திம்மராயன் என்பவர் உதவியுடன், சிவக்குமார் மற்றும் நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் எட்டரை சென்ட் நிலத்தையும், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து சமீபத்தில் வாங்கியுள்ளார்.

தான் வாங்கிய நிலத்திற்கு பிரகாஷ் முள்வேலி அமைக்கச் சென்றபோது, இரண்டரை சென்ட் நிலத்தை வாங்கி இருப்பதாகக் கூறி, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிலத்தை வாங்கிக் கொடுத்த திம்மராயனிடம் சென்று கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் கிராம மக்களுக்கு தெரியவர, நிலம் விற்பதற்கு மூல காரணமாக செயல்பட்டது திம்மராயன் என தெரியவந்ததை அடுத்து ஆத்திரமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திம்மராயன், அவரது தம்பி மற்றும் தாய் என 3 குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஊர் பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இந்த 3 பேரின் வீடுகளுக்கு செல்லும் வழிப்பாதையை முள்வேலிகள் போட்டு அடைத்தனர்.

அவர்களிடம் யார் பேசினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராமத்தினர் முடிவெடுத்து தீர்மானித்தனர்.

இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, ஏற்கனவே ஒருமுறை முள்வேலியை அஞ்செட்டி போலீசார் அகற்றினார். ஆனால், அந்த இடத்தில் மீண்டும் கிராம மக்கள் முள்வேலி அமைத்தனர்.

இது தொடர்பாக திம்மராயன் கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்