திருப்பரங்குன்றம் அருகே விளைநிலத்தில் புகுந்த கண்மாய் நீரால் 60 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் நேரங்களில், சோளங்குருணி கண்மாயின் கிழக்கு பக்கம் வடிகால் கால்வாய் இல்லாததால் விவசாய நிலங்களில் நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக ரூபாய் 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 70 விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகாதவாறு கண்மாயில் மறுகால் பாய்வதற்கான வடிகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.