வாயில் டேப்போடு மாணவர்கள் தவித்த விவகாரம் - மாணவி வெளியிட்ட வீடியோவால் புதிய திருப்பம்

Update: 2024-11-14 07:49 GMT

தஞ்சை அய்யம்பட்டியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னணி என்ன பார்க்கலாம் விரிவாக...

வாயில் டேப் ஒட்டியபடி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவதிப்பட்டதாக மாணவர் ஒருவர் பேசிய வீடியோவும், டேப் ஒட்டியபடி இருந்த மாணவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது...

தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்க...இவ்விவகாரம் பேசு பொருளானது..

இச்சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்ததில், தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 21ம் தேதி இச்சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது...

இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, வகுப்பறையில் ஒரு மாணவனை வகுப்பை கவனிக்க சொல்லிவிட்டு சென்றதாகவும், அந்த நேரத்தில் அந்த மாணவரே மற்ற மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் கூறப்பட்டது...

இதனால் கொதித்தெழுந்த பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்...

இந்நிலையில், ஏற்கனவே ஆசிரியர் டேப் ஒட்டியதாக மாணவர் ஒருவர் பேசியிருந்த நிலையில், டேப் ஒட்டியது ஆசிரியரல்ல மாணவர் தான் என மாணவி ஒருவர் பேசிய வீடியோவும் அடுத்ததாக வெளியாகி வைரலானது...

இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், புகாருக்குள்ளான ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியரான புனிதா, ஆசிரியர் பெல்ஸி சுமாகுலேட் க்றிஸ்டி, மற்றும் முருகேஸ்வரி ஆகியோர் பணியிடமாற்றம் செய்ய வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதே போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றொர்கள்...

தந்தி டிவி செய்திகளுக்காக தஞ்சையில் இருந்து ஒளிப்பதிவாளர் பாட்ரிக் உடன் செய்தியாளர் சையத் மௌலானா... 

Tags:    

மேலும் செய்திகள்