சென்னையில் போலீஸ் ஸ்டேஷன் எதிரிலே.. SBI வங்கியில் துணிகர கொள்ளை முயற்சி
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே வாலாஜா சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளைக்கு காலையில் வந்த வங்கி ஊழியர்கள், கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, வங்கியில் இருந்து எதுவும் கொள்ளை போகவில்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், வங்கி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த மர்ம நபர், அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து, பணம் இருக்கும் லாக்கரை உடைக்கும்போது அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இரவு பாரிமுனையில் ஒரு டீ கடை அருகே நின்று கொண்டிருந்த அந்த நபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர், வாய் பேச இயலாத வடமாநிலத்தை சேர்ந்தவர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த நபரிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியாத நிலையில், எழுத்து வடிவில் எந்தவொரு தகவலையும் பெற முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.