சாம்சங் நிறுவனம், சில தொழிலாளர்களை மீண்டும் அழைக்காததால், தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி சென்னையில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களுக்கும் ஆலை நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு கடந்த 19-ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்குத் திரும்பிய நிலையில், 300 பேருக்கு மட்டும் பயிற்சி கொடுத்து பணிக்கு சேர்த்து விட்டு, மீதமுள்ளவர்களை சாம்சங் நிர்வாகம் பணிக்கு அழைக்கவில்லை. குறிப்பாக, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் 57 பேரில் ஒருவரை கூட பணிக்கு அழைக்கவில்லை. இதையடுத்து, பணிக்கு செல்லாத ஊழியர்கள், சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள அரசு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.