புழல் சிறையில் போலீஸ் தாக்குதலா?..கோமாவுக்கு சென்ற இளைஞர் - கண்ணீருடன் கதறும் தாய்

Update: 2024-06-07 09:07 GMT

புழல் சிறையில் காவலர் தாக்கியதால் உயிருக்கு போராடி வரும் தனது மகனுக்கு உரிய நீதி வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடியைச் சேர்ந்த செல்லமுத்து- வனிதா தம்பதியின் மகன் கோகுல், ஆவடியை அடுத்த மோரை கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை கோகுலை கஞ்சா வழக்கில் கைது செய்த சோழவரம் போலீசார், அன்றிரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சிறையில், காவலர் ஒருவர் காகித கத்தையால் கோகுலின் தலையில் தாக்கியதில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை, கோகுலின் கை, கால்கள் செயல்பாட்டை இழந்து, உடல்நிலை மேலும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால் அவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோகுலின் பெற்றோர், காவல் துறையினரிடம் முறையிட்டபோது, கோகுல் அதிக போதைப்பொருட்கள் பயன்படுத்தியதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிவரும் தனது மகனுக்கு உரிய நீதி வேண்டும் எனவும், தனது மகனை தாக்கிய சிறைக் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோகுலின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்