நக்கல் தொனியில் வாதிட்ட NLC.. தன் பவரை காட்டிய நீதிபதி.. வாயடைத்த NLC.. ஐகோர்ட்டே அதிர்ந்த தருணம்

Update: 2023-07-29 03:59 GMT

நெய்வேலியில் நெற்பயிர்களை புல்டோசர் கொண்டு அழித்த விவகாரத்திற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நெல் வயல்களில் பயிர்களை பொக்லைன் இயந்திரங்கள் அழிக்கும் இந்த காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 2 ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. ஏற்கனவே வாங்கிய நிலமாக இருந்தாலும்... மற்ற கோரிக்கையை தாண்டி கதிர் அறுக்கும் வரையிலாவது பொறுங்கள் என்பது விவசாயிகளின் கண்ணீர் கோரிக்கையாக இருந்தது.

இருப்பினும் என்.எல்.சி. கால்வாய்களை தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சூழலில் என்.எல்.சி வெளியேற வேண்டும் என்ற பாமக போராட்டம் தொடங்கியது.

மறுபுறம் என்.எல்.சி. நிர்வாகம் - தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றமே, என்.எல்.சி. கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. அப்போது என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அதிக இழப்பீடு கொடுத்துவிட்டதாகவும், தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல், பயிரை அறுவடை செய்யும் வரையில் இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? என கேள்வியை எழுப்பினார்.

பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்றும் நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார் நீதிபதி. மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவ ராசிகளுக்கும் வாழ்வாதாரமான பயிர்கள் அழிக்கப்படுகிறதே என்ற கோபம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம் என எச்சரித்தவர், பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் கை வைத்தால் பருவமழை நிற்கும், காவிரி டெல்டா, தாமிரபரணி பகுதி, வட தமிழகத்தில் நெல் விளையும் பகுதிகளை அழித்தால் அரிசிக்கு வழியில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும் பணத்தை வைத்து விவசாயி என்ன பண்ணுவார் என கேள்வியை எழுப்பினார்.

நீதிபதி அதிருப்தி தெரிவித்த போதே, என்.எல்.சி. தரப்பில் நீதிமன்ற அறையில் மின் விளக்குகள் ஏசி இயங்க நிலக்கரியே காரணம் என தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாள் முழுவதும் அறையில் ஏசியை அணைத்து வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே பயிர் வைக்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லிவிட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதற்கிடையே ஒட்டுமொத்தமாக என்.எல்.சி. வெளியேறும் வரையில் போராட்டம் தொடரும் என அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்