பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த முருகன்- மாரி தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த இடத்தை 1993ம் ஆண்டு, 36 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவாக அரசு வழங்கி உள்ளது . இந்நிலையில், அந்த இடத்தில் விவசாயம் செய்யக்கூடாது என முருகன் குடும்பத்தினருடன், அதேபகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, நாராயணனிடம் மாரி பேச சென்றபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தாக்கப்பட்ட இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.