மதுரையே இறங்கி செய்த சம்பவம்.. தமிழகம் நோக்கி திரும்பிய நாட்டின் கவனம்

Update: 2025-01-08 03:33 GMT

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு சொல்லியும் மக்களின் பிரமாண்ட பேரணி எதற்கு என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


மதுரையை நோக்கி சாரை, சாரையாக வந்த ஆயிரக்கணக்கான மக்களால் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம்....

மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள், வாகனத்தில் வந்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

ஆனால், மேலூர் நரசிங்கம்பட்டியில் கூடிய விவசாயிகள், வணிகர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மதுரையை நோக்கி பேரணியாக நடக்க தொடங்கிவிட்டனர். வழிநெடுங்கிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களுக்கு குடிநீர் வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளரிப்பட்டி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோதும், பேரணி மதுரை மாநகருக்குள் நுழைந்தது.

டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என கூறியிருக்கும் தமிழக அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்துவோம் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்படி வந்தால் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் பேரவையில் ஆவேசமாக தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது மத்திய அரசு.

சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய, அதாவது பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு சுரங்க எல்லையை மறுவரையறை செய்ய சாத்தியக் கூறுகளை கண்டறிய இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு பரிந்துரையை வழங்கியது.

இதனையடுத்து ஒட்டுமொத்த திட்டத்தையும் மத்திய அரசு கைவிடவில்லை, சூழ்ச்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு மேலோங்கியது.

அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193 ஹெக்டேர் நிலப்பகுதியை தவிர்த்து ஆயிரத்து 800 ஹெக்டேர் அளவில் சுரங்கம் அமைக்கவே அரசு திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறதுது.

இப்போது சுரங்கம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் மக்கள், சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்