"வாரத்திற்கு 90 மணி நேர வேலை.. ஞாயிறும் ஆபிஸ்" - கொதிக்கவிட்ட வார்த்தை.. கொந்தளிக்கும் இந்தியா

Update: 2025-01-10 05:44 GMT

இளம் தலைமுறையினர் வாரம் 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வரிசையில் இணைந்திருக்கிறார் பிரபல L&T நிறுவனத்தின் சேர்மேன் சுப்ரமணியன். அவர் பேசியது என்ன? என்பது பற்றி அலசுகிறது பின்வரும் தொகுப்பு..

வீட்டில் வெறுமனே உட்கார்ந்து கொண்டு எவ்வளவு நேரம் தான் கணவன் முகத்தை மனைவியும், மனைவி முகத்தை கணவரும் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

போட்டிகளை சமாளிக்கும் வகையில் செயல்பட ஞாயிறு அன்றும் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் பிரபல L&T நிறுவனத்தின் சேர்மேன் சுப்ரமணியன்.

இது தொடர்பாக இணையத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது நிறுவன பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்ரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் L&T ஊழியர்களை வேலை செய்ய வைக்க முடியாமல் போனதற்காக தான் வருந்துவதாக கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன், ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன் என்று அவர்

கூறிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

பணியாளர்கள் வாரம் 90 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டும் என்றும், அதுவே போட்டிகளை சமாளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீன நிறுவன பிரதிநிதி ஒருவரிடம் பேசியபோது, அமெரிக்காவை முந்தி செல்லும் விரைவான வளர்ச்சிக்கு சீனாவின்

வலுவான பணிச் சூழலே காரணம் என்று தன்னிடம் கூறியதை சுப்ரமணியன் மேற்கோள் காட்டியுள்ளார்.

சீனாவில் பணியாளர்கள் வாரம் 90 மணி நேரம் வரை வேலை பார்ப்பதாகவும், மாறாக அமெரிக்காவில் வாரம் 50 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சுப்ரமணியன், L&T ஊழியர்கள் சீனாவை போன்ற பணிச் சூழலை

பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் சுப்ரமணியனின் கருத்தை இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்துடன் ஒப்பிட்டு பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாராயண மூர்த்தி வரிசையில் சுப்ரமணியனும் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக பயனர் ஒருவர் கருத்து பதிவிட, அதிக ஊதியம் பெறும் உயர்நிலை அதிகாரிகள், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களிடமிருந்து அதே அளவிலான அர்ப்பணிப்பை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிக வேலை நேரங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்ப இணையத்தின் இந்த விஷயம் தீயாய் பரவி வருகிறது.

Work Life balance என்பதில் L&T மிகவும் மோசமான நிறுவனம் என்று கூறியிருக்கும் முன்னாள் பணியாளர் ஒருவர், வாரம் 6.5 நாட்கள் வேலை செய்யும் பொறியியல் பட்டதாரிக்கு 35 ஆயிரம் என்ற குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாகவும்,

இத்தகைய மோசமான பணிச் சூழல் காரணமாகவே L&T

நிறுவனத்தில் பணியில் சேருபவர்கள் 3 ஆண்டுகளுக்குள்ளாகவே வேலையை விட்டு சென்றுவிடுகிறார்கள் என்றும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்