லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்... கண்ணீர் மல்க பெற்றோர் வைத்த கோரிக்கை
கோவை மருதமலை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லண்டனில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 14-ம் தேதி, பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு விக்னேஷ் சைக்கிளில் சென்றபோது, காரில் வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் லண்டன் போலீசார் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த விக்னேஷின் உடலை இந்தியா கொண்டு வர, அவரது தந்தை பட்டாபிராமன் என்பவர், சென்னையில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகினார். ஆனால், மகன் கொலை செல்லப்பட்டு 11 நாட்களாகியும், லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை என்றும், இறந்த மகனின் இறுதி மரியாதையை முறைப்படி செய்ய முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.