அடுப்பில் தக்காளி சாதம் சமைத்து.. தினுசாக போராட்டத்தை தொடங்கிய பெண்கள் - ஆண்கள் வலுக்கட்டாய கைது..
கரூர், வெண்ணைமலை கோயிலில் முற்றுகை போராட்டத்தை கைவிட மறுத்த பெண்களுக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆண்கள், வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணியும், கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மலைக்கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கந்த சஷ்டி விழாவுக்கான பூஜை செய்யவும் அர்ச்சகரை விடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, பூஜைக்காக அர்ச்சகரை மட்டும் அனுமதித்தனர். அதே நேரத்தில், அடுப்பு வைத்து தக்காளி சாதம் சமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, பெண்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரண்டிருந்த ஆண்கள் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால், போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.