வாடகை தரமுடியாமல் தவித்த குடும்பத்தை கதறவிட்ட ஓனர்... யாரும் எதிர்பாரா உச்சகட்ட பயங்கரம்

Update: 2024-06-19 10:37 GMT

வாடகை தரமுடியாமல் தவித்த

குடும்பத்தை கதறவிட்ட ஓனர்

யாரும் எதிர்பாரா உச்சகட்ட பயங்கரம்

போலீசே பார்த்து மிரண்ட காட்சி

பல மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாததால் வீட்டின் மாடிப் படிக்கட்டை வீட்டு உரிமையாளர் உடைத்த நிலையில், வாடகைக்குக் குடியிருந்தவர்கள் மாடியில் இருந்து கீழே இறங்க முடியாமல் பலமணி நேரம் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

வாடகை தராத ஆத்திரத்தில் வாடகைக்குக் குடியிருந்தவர்களை பழிவாங்க நினைத்த உரிமையாளர் செய்த செயல் தான் இது. காஞ்சிபுரம் விளக்கடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான வீடு, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வானவில் நகரில் அமைந்துள்ளது. மேல் மாடி, வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது...அங்கு அவர் தனது மனைவி லீலா, மகள் மகாலட்சுமி, பேரப் பிள்ளைகள் 2 பேர், தம்பி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். திடீரென வேணுகோபாலுக்கு பக்கவாதம் தாக்கவே வீட்டில் படுத்த படுக்கையாகியுள்ளார்...வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாததால் பல மாதங்களாக வாடகையும் தர முடியாமல் போயுள்ளது. இவர்கள் நிலைமை இப்படி இருக்க, ஒருமாதம், 2 மாதம் பொறுத்திருந்து பார்த்த வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் பல மாதங்கள் வாடகை பணம் வராததால் வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு வேணுகோபாலை வற்புறுத்தியுள்ளார். இந்த சூழலில், வேணுகோபாலின் தம்பியான பாபு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி வாடகை செலுத்த சீனிவாசனிடம் கால அவகாசம் பெற்றுள்ளார். அதன்பின்னரும் பல மாதங்கள் தொடர்ந்து வாடகை பணம் வராததால் மீண்டும் வீட்டை காலி செய்ய சீனிவாசன் அழுத்தம் கொடுத்துள்ளார்... ஆனால் வேணுகோபால் குடும்பத்தினர் காலம் தாழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சீனிவாசன் வழக்கமான வீட்டு உரிமையாளர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் தான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டின் மாடிப் படியை சுக்கு நூறாக உடைத்து கீழ் தளத்தையும் மேல் தளத்தையும் துண்டித்து விட்டார். இந்த நகர்வை சற்றும் எதிர்பாராத வேணுகோபாலின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் காவல்துறைக்குப் புகாரளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வேணுகோபால் பக்கவாததால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்கே அதிக பணம் செலவழித்து விட்ட நிலையில் வாடகை தர முடியவில்லை என வேதனை தெரிவித்த வேணுகோபால் குடும்பத்தினர் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை...பிள்ளைகள் பள்ளிக்கும் செல்லவில்லை என புலம்பித் தள்ளினர்...

இந்நிலையில் மேல் மாடியில் சிக்கித் தவித்த வேணுகோபால் குடும்பத்தினரை மிகவும் சவாலான முறையில் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்...

தொடர்ந்து வேணுகோபால் குடும்பத்தினரை சமாதானப் படுத்தி அவர்களின் உறவினர் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்...

குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்க தன் வீடே போனாலும் பரவாயில்லை என்று அதன் உரிமையாளர் மாடிப்படியை இடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்