சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த திட்டத்தை வகுத்து, விவரங்களை தாக்கல் செய்யும்படி, தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் அமர்வில் வியாழக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுக்கும் பொது தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன் இதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது, கடவுள் தான் அனைவருக்கும் மேலானவர் என்பதால், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
கனக சபையில் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு ஏன் தலையிட போகிறது என்றும்,
தீட்சிதர்கள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்ததால்தான் அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கனக சபையில் பக்தர்களை எப்படி அனுமதிப்பது எந்த நேரத்தில் அனுமதிப்பது குறித்த வழிமுறைகளுடன் திட்டத்தை வகுத்து,
வரும் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.