சுழற்றி அடித்து மிதித்த யானைகள்.. 10 பேர் கொடூர சாவு.. இதை கேட்டால் தமிழகம் அதிரும்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், வனத்துறை அலட்சியத்தால் யானைகள் தாக்கி 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் விவசாயிகள்...இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...
தமிழகத்தில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வனப்பகுதியாக அறியப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த மலை கிராமங்களில் சரியான போக்குவரத்து வசதி, தொலைதொடர்பு வசதி, இல்லாத கிராமங்கள் அதிகம்...
இங்கு வசிக்கும் மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் சூழலில், வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், கரும்பு, வாழை, ராகி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் தங்கள் பயிர்களை காக்க விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணி மேற்கொள்ளும் போது, காட்டு யானைகள் பிடியில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது..
அதிலும் நடப்பாண்டில் மட்டும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்க்கும் தொழிலாளர்கள் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ள விவசாயிகள் ஓரிரு தினங்களுக்கு முன் விவசாயி ஒருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியதோடு அவரின் இறப்புக்கு வனத்துறையே முக்கிய காரணம் என்கின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழையும் காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணிக்கு வனத்துறையினர் சரிவர வருவதில்லை என்பது மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
இதற்கு ஒரே தீர்வு வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட அகழி குழிகளை பராமரிப்பது மட்டுமே என்கின்றனர் விவசாயிகள்...
தொடர்ச்சியாக, காட்டு யானைகளால் உயிரிழப்பு, பயிர் சேதம் ஏற்பட்டு வருவதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி வாழும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள்.. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.