கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை அடுத்துள்ள பின்னலூர் கிராமத்தில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நடுவே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காகச் சாலையின் நடுவே எந்த விதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இன்றி ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் என்ற இளைஞர் சேத்தியாதோப்பு நோக்கி தனது இரு சக்கரவாகனத்தில் சென்று இருக்கிறார். அப்போது சாலையில் நடுவே கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்கள் தெரியாததால் அதன் மீது மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதன் காரணமாக சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடிகால் பணிகளை அலட்சியமாக மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.