கடலூர் சிலம்பநாதன் பேட்டையில் அரசுக்கு சொந்தமான186 ஏக்கர் நிலங்கள், எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேலு தொடர்ந்த வழக்கில், திமுக முன்னாள் எம்.பி ரமேஷ், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் ஆகியோரின் உறவினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக நில நிர்வாக ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மனுதாரர் குற்றம் சாட்டியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றும் கிரைய ஆவணங்கள் அடிப்படையில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தால் பட்டாவை ரத்து செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.