சென்னை பாடி மேம்பாலம் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், பாடி மேம்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, போலீசார் விசாரித்தபோது சிறு பொட்டலங்களாக மாற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பல முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இருவர் கொடுத்த தகவலின் பேரில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் குமரவேல் என்பவர், வண்ணாரப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் விசாலாட்சியின் கணவர் என்பதும், பார்த்திபன் என்பவர், புழல் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை ஆன்லைன் ஆப் மூலம் விற்பனை செய்ய முயன்றார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.