தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்ய, தேர்வு கட்டுப்பாட்டுத் துறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்று இயங்கி வரும் 450 பொறியியல் கல்லூரிகளில், தற்பொழுது 116 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. ஆனால் தன்னாட்சி கல்லூரிகள் சமீப காலமாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க, அண்ணா பல்கலைக் கழகத்தின் 271 வது சிண்டிகேட் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய அனைத்து பருவத்தேர்விலும், அனைத்து பாடத்திலும் ஒரு கேள்வித்தாள் தயார் செய்து தேர்வு நடத்தி சோதனை செய்ய அண்ணா பல்கலைக் கழகம், தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இதற்கு செக் வைக்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.