திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சதா என்பவரின் மகன் விக்கி என்கிற ராயப்பன், 4 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதான என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த அவர் மீது, கொலை முயற்சி உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. செவ்வாய்க்கிழமை மதியம், மனைவியிடம் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியே சென்ற விக்கி, இரவு வீடு திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், நாப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை பின்புறம் முட்புதரில் தலையில் ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணலி புதுநகர் காவல் துறையினர், விக்கியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்கியுடன் மது அருந்திய மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். மது குடிக்கும்போது வாய்த் தகராறு ஏற்பட்டு, அங்கிருந்த கட்டையால் தாக்கி அவர்கள் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பழைய நாப்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த், அகிலன், ரவீந்திரகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.