அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு - நீதிமன்றம் போட்ட உத்தரவு | Minister Senthil Balaji

Update: 2024-12-10 06:15 GMT

பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, நீதிமன்றம், வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். வழக்கில் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள், எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற வசம் உள்ளதால், அமலாக்கத்துறையால் வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது, டிசம்பர் 16ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்