கேரள ஆளுநரின் வழியனுப்பு நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர் பினராயி விஜயன் | Pinarayi Vijayan
கேரள ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த ஆரிப் முகமது கானின் பதவிகாலம் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அவர், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனிலிந்து, ஆரிப் முகம்மது கான் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரது வழியனுப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் பினராயி விஜயனோ, அமைச்சர்களோ பங்கேற்கவில்லை. மாறாக, தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திடுவது போன்ற விவகாரங்களில் கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால், ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஆளுநரும், முதலமைச்சரும் இருந்தால் கூட, ஒருவரையொருவர் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்தது. ஆளுநர் அளித்த விருந்தில் கூட அமைச்சர்கள் உள்பட யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில்தான், ஆரிப் முகம்மதுகானின் வழியனுப்பு நிகழ்ச்சியை, முதலமைச்சரும், அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். இதனிடையே, ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய எஸ்எப்ஐ அமைப்பினர், பேட்டை பகுதியில் நின்று, காரில் சென்ற ஆளுநருக்கு டாட்டா காட்டி அனுப்பி வைத்தனர்.