நெருங்கும் தேர்தல்... முக்கிய கட்டத்தில்; முக்கிய முடிவு... பஞ்ச அஸ்திரங்களை கையிலெடுத்த காங்.,
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இளைஞர்களை கவரும் வகையில் ஐந்து முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அறிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், உடனடியாக மத்திய அரசில் காலியாக உள்ள சுமார் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறியுள்ளார். தொழில் பயிற்சி உரிமை சட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம், 25 வயதுக்கு உட்பட்ட டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
தொழில் பயிற்சிக்கான உதவித்தொகையாக மாதந்தோறும் 8 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் புதிய சட்டத்தின் மூலம், வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார்.
ஓட்டுநர்கள் தச்சர்கள் மெக்கானிக் டெலிவரி நபர்கள் போன்ற முறைசாரா துறை பணியாளர்களுக்காக, சமூகப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். ஐந்தாயிரம் கோடி முதலீட்டில் 'யுவ ரோஷினி' என்ற திட்டம் உருவாக்கி, நாட்டில் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார்.