பாஜக, அதிமுக குழப்பத்தில் நிற்க... திமுகவிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? இது லிஸ்ட்லயே இல்லையே!

Update: 2024-03-03 14:16 GMT

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூன்று நாட்களில் 161 பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது... அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

தேர்தலின் கதாநாயகன் யார் என்று பார்த்தால், அது ஆள்காட்டி விரலில் மையை சுமக்கும் மக்கள்தான். ஆகையால் கட்சித்தலைவர்கள் தொடங்கி, பிரதமர், தொகுதி எம்எல்ஏ, எம்பி வரை எல்லோரும் நேரடியாக மக்களை சந்திக்கும் நேரமிது...

அந்த வகையில் தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மக்களை ஒரு பார்வை பார்த்துவிடலாம் என பவனி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திமுகவினர் களத்தில் முந்திக் கொண்டனர். சமீபத்தில்தான், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்', இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்களை சந்தித்தனர்.

அதே சூட்டுடன், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் 161 பொதுக்கூட்டங்களை பிளான் செய்திருக்கிறது திமுக. மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில், தமிழ்நாட்டில் உள்ள மாநரகாட்சி, நகராட்சிகளில் இந்த 161 பொதுக் கூட்டங்களும் நடைபெறவுள்ளது. இப்பொதுக் கூட்டங்களில், திமுகவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமர்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைதான், இந்த 161 பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றது.

சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், உள்ளிட்ட 7 இலக்குகளை மையமாக வைத்து நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த கூட்டங்கள்

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி வரும் திட்டம், விடியல் பயணம், தமிழ் புதல்வன், மத்திய அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி, இது போக கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மகளீருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை திமுக தனது வெற்றித் திட்டங்களாக கருதுகிறது.

இவற்றை சரியாக போக்கஸ் செய்து கடைக்கோடி தமிழன் வரை கொண்டு சேர்த்தாலே, இந்த மக்களவை தேர்தலில் 40-ம் நமதே என்ற இலக்கை எட்டிவிடலாம் என கணக்கு போட்டுள்ளது திமுக.

அதே போல, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மீதான குற்றச்சாட்டுகளையும், இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் இந்த கூட்டங்களின் துணை பேசும்பொருளாக இணைத்துள்ளன.

பாஜகவினர் இன்னமும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை... அண்ணா திமுகவில் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்றது. நிலவரம் இப்படி இருக்க, தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டனர். மறுபக்கம் தீவிர பிரச்சார வேலைகள் என சுறுசுறுப்பு காட்டி வருகிறது திமுக. அதே நேரத்தில் ரெட் அலார்ட் தொகுதிகளை வலுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

திமுகவின் தேர்தல் நேரத்து யுத்திகள் எந்த அளவிற்கு, கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்