வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்திற்கு முன்பு, திமுக நிர்வாகிகள் இருவர் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், அவர்களை பிற நிர்வாகிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள் வருகைத் தந்திருந்த சூழலில், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மற்றும் காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளரான கருணாகரன் ஆகியோர் அமைச்சர் வீட்டின் முன்பு சண்டையிட்டுள்ளனர். ஒருவழியாக கட்சி நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், ஒன்றிய குழு தலைவர் வேல்முருகனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கருணாகரன் திருப்பி தராததால் பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது.