பாகிஸ்தான் அணுகுண்டை போடும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் குண்டை போட்டுவிடும் என்ற மணிசங்கர் அய்யர் பேச்சை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. ஒடிசா மாநிலம் கந்தமாலில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மணிசங்கர் பேச்சை விமர்சித்து, காங்கிரஸ் சொந்த நாட்டு மக்களையே அச்சுறுத்த பார்க்கிறது என விமர்சித்தார். சொந்த குண்டுகளையே கையாள முடியாத பாகிஸ்தான், அதையெல்லாம் விற்றுவிட முயற்சி செய்கிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தரமில்லாத பாகிஸ்தானின் குண்டுகளை வாங்க யாருமில்லை என்றார். காங்கிரசின் பலவீனமான அணுகுமுறையால், ஜம்மு காஷ்மீர் மக்கள் 60 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள வேண்டியதிருந்தது எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பயங்கரவாத இயக்கங்களோடு பேசிய காங்கிரசை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என கூறிய பிரதமர் மோடி, 2008 மும்பை தாக்குதல் குறித்து விசாரிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை என விமர்சித்தார். இந்தியா கூட்டணி அவர்களுடைய ஓட்டு வங்கி பாதிக்கும் என்றே நினைக்கிறார்கள் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விளாசினார்.