``திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?’’ - பகீர் கிளப்பிய அண்ணாமலைக்கு அன்பில் பொளேர் அடி

Update: 2024-12-24 04:28 GMT

தமிழக அரசு பள்ளிகளுக்கான இன்டர்நெட் கட்டணம் நிலுவை விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தமிழக அரசு பள்ளிகளுக்கான இன்டர்நெட் கட்டணம் விவகாரம் திமுக - பாஜகவுக்கான clash பாயிண்டாக அமைந்துள்ளது.

தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, கணிணிகள் மற்றும் புரோஜக்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 3,700 அரசு பள்ளிகளில் பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் சேவை பாரத் ஃபைபர் இணைப்பு வழங்கப்பட்டது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளுக்கான கட்டணம் ஒன்றரை கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், உடனடியாக கட்டவில்லை என்றால் சேவை துண்டிக்கப்படும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் 19 ஆம் தேதி எழுதிய கடிதம் சர்ச்சையானது

இந்த சூழலில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பிரச்சினைகளை பட்டியலிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? என கேள்வியை எழுப்பினார்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கட்டண நிலுவை எதுவும் இல்லை என்றும் அரைகுறையாக பேசுபவர்களை கண்டுகொள்ளாதீர்கள் எனவும் குறிப்பிட்டார்.

6 மாதங்களுக்கு ஒருமுறை தொகை விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் அன்பில் மகேஷ்...

ஆனால்... அமைச்சர் பொய் சொல்வதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்பு கட்டணமான ரூ.1.50 கோடியை கட்ட முடியலையா? என கேள்வியை எழுப்பினார். விளம்பர மாடல் ஆட்சியில் எந்த துறையும் தங்களுக்கான பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டிய அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.

இருதரப்பு மோதல் இவ்வாறாக செல்ல... பள்ளிகளுக்கான இன்டர்நெட் கட்டணத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளுக்கான இன்டர்நெட் கட்டணத்திற்காக 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, இப்போதுதான் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கேள்வியை எழுப்பியுள்ளார் எக்ஸ் தளத்தில்...

Tags:    

மேலும் செய்திகள்