மீட்டிங்கில் ஈபிஎஸ் காதில் விழுந்த சேதி கடும் விரக்தியில் 2ம் கட்ட தலைவர்கள் ஜூலை 24க்கு பின் ஈபிஎஸ் முடிவு என்ன?
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசித்த எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நடவடிக்கை என்ன...? என்ற கேள்வி இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் எழுந்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது.
7 தொகுதிகளில் டெபாசிட் போனது... குமரி, புதுச்சேரியில் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜாபர் சாதிக் கைது, சொத்து வரி உயர்வு, மின்கட்ட உயர்வு உள்ளிட்டவற்றை வைத்து பிரசாரம் செய்த அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. தோல்வியை அடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசிக்க தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, முதல்கட்டமாக 23 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தினார்.
அப்போது கூட்டணி பலமாக அமைக்காதது தோல்விக்கு காரணம்.. சில தொகுதிகளில் வேட்பாளர்கள் சரியில்லை... பரிச்சயமான முகங்கள் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.. பல மாவட்டங்களில் உள்கட்சி பூசலால் பொறுப்பாளர்கள் ஈடுபாடோடு வேலை செய்யவில்லை... என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் நிர்வாகிகள் எடப்பாடியிடம் அடுக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இதையெல்லாம் கேட்ட எடப்பாடி பழனிசாமி... மக்கள் நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.. அதிமுக வாக்கை சுட்டிக்காட்டி 2026 தேர்தலுக்கு ஒருங்கிணை பணியாற்ற அறிவுறுத்தியதாக தெரியவந்தது.
பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை எனவும் கூட்டத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பேச்சு நம்பிக்கை அளித்தாலும்... சில விஷங்களால் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில கவலை தெரிவிக்கவும் செய்கிறார்கள். பாஜக கூட்டணியை முறித்தாலும் சிறுபான்மையினர் வாக்கை அதிமுகவால் பெற முடியவில்லை. இப்போது சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற கடுமையாக உழைக்க எடப்பாடி பழனிசாமி பேசினாலும், கொள்கை ரீதியாக பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, இப்போது வரையில் தோல்வியே மிச்சமாகும் வேளையில்.. தோல்விக்கு பொறுப்பாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குறைபடுகிறார்கள். 2014 தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வென்ற போதும், தோல்வி அடைந்த 2 மாவட்ட செயலாளர் பதவியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பறித்தார் எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்சி உயிர்ப்போடு இருக்கும் என நம்பும் அவர்கள், எடப்பாடி தயவு தாட்சண்யம் இல்லாது நடவடிக்கையை எடுப்பாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
வரும் 24 ஆம் தேதி முதல் 2 ஆம் கட்ட ஆலோசனையை நடத்தவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகே எடப்பாடி பழனிசாமி ஆக்ஷன் என்னவென்று தெரியவரும்.